உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களின் முயற்சியால்... Tamil KDE Logo

தமிழ் கேடிஈ திட்டம்

தமிழ் கேடிஈ இடைமுகத்தை நொப்பிக்ஸ் கொண்டு சோதித்துப் பார்க்க உங்களை வரவேற்கிறோம். நொப்பிக்ஸ் தமிழை இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.

மொழிபெயர்ப்பாளர்களுக்கு...

தமிழ் கேடிஈ திட்டத்திற்குப் பங்களிக்க விரும்புகிறீர்களா? முதலில் பிரபு ஆனந்த் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்புக் கையேட்டினை இனை வாசியுங்கள். கேடிஈ மொழிபெயர்ப்புக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் கலைச்சொல் அகராதியைப் பயன்படுத்துகிறோம். அதனை இறக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து, மொழிபெயர்க்க உதவும் கருவியொன்றை நிறுவிக் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்புக்கு உதவும் கருவிகளிற் சில:

கேடிஈ 3.2 பதிப்பிலிருந்து, கேடிஈ தமிழ் மொழிபெயர்ப்புக்கள் தமிழ் குறியீட்டுத் தரம் (TSCII) இலிருந்து யூனிக்கோட் குறியீட்டு முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக்கள் தமிழ் யூனிக்கோட்டில் இருப்பதால் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு, விசைப்பலகை என்பவற்றையும் நிறுவ வேண்டும். எழுத்துருக்களையும், விசைப்பலகையையும் தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

எந்த நிரல்களுக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது எனும் விபரத்தை கேடிஈ மொழிபெயர்ப்புப் புள்ளிவிபரத் தளத்தில் பாருங்கள். இவற்றில் எந்த நிரலை தமிழ்ப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை தெரிவு செய்து, தமிழ் கேடிஈ ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சல் (t_vasee at yahoo dot com) அனுப்புங்கள். கேடிஈ மட்டுமல்லாமல் பிற தமிழினிக்ஸ் முயற்சிகளிலும் கலந்து கொள்ள தமிழினிக்ஸ் யாஹூ குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

முக்கிய நிகழ்வுகள்

கேடிஈ இடைமுகத்தை தமிழ்ப்படுத்தும் முயற்சி 2000-ஆண்டு பெப்ரவரி மாதம் சிவகுமார் சண்முகசுந்தரத்தால் தொடக்கப்பட்டது. இது தொடர்பாக kde-i18n-doc மடற்குழுவிற்கு சிவகுமார் அனுப்பிய மின்னஞ்சலை இங்கே காணலாம். அடுத்த சில வாரங்களில் அவரின் மொழிபெயர்ப்புகளை தனது கணினியில் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது பற்றி kde-i18n-doc இற்கு வசீகரன் மின்னஞ்சல் அனுப்பினார்.

சிவகுமார் சண்முகசுந்தரம், கோமதி சிவகுமார் ஆகியோரின் கடும் உழைப்பின் பயனாக 2000-ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த கேடிஈ 2.0 பதிப்பில் தமிழ் உத்தியோகபூர்வமாக இடம் பெற்றது; கேடிஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி எனும் பெருமையையும் பெற்றது. கேடிஈ இனைத் தமிழ்மயப்படுத்தும் இம்முயற்சிக்கு தகுதரம் (TSCII), நாகு சின்னசாமியின் அகரம் செயலி, எழுத்துரு என்பவை அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கேடிஈ 2.0 இடைமுகம் பற்றி சிவகுமார், கோமதி தமிழினிக்ஸ் மடற்குழுவில் குறிப்பு அனுப்பினர்.

ஆரம்பத்தில் கேடிஈ இல் தமிழ் உள்ளிடுவதற்கு அகரம் செயலியில் தட்டி, கேடிஈ நிரல்களில் வெட்டி ஒட்டினோம். பின்னர், KIKBD, XKB எனும் உள்ளீட்டு முறைகளுக்குரிய தமிழ் விசைப்பலகைளை சிவகுமாரும், வசீகரனும் உருவாக்கினோம். ஆரம்பகால கேடிஈ முயற்சிகள் பற்றிய வலைத்தளம் ஒன்றில் இவை இடம் பெற்றன. பின்னர், தினேஷ் நடராஜா உருவாக்கிய tamilxkb செயலியால் பல்வேறு விசைப்பலகை முறைகளில் இலகுவாக தமிழை உள்ளிட முடிந்தது.

இவ்வாறு தொடங்கிய தமிழ் கேடிஈ முயற்சி, தமிழினிக்ஸ் மடற்குழு வாயிலாகவும் நேரடியாகவும் இணைந்து கொண்ட உலகளாவிய தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பால் வெற்றிகரமாகத் தொடந்து வருகிறது.

தமிழ் கேடிஈ அணி